Author: Priya ram
•Tuesday, September 04, 2012

பாக்கியம் ராமசாமி அவர்களின் "சில நேரங்களில் சில அனுபவங்கள்" என்ற புத்தகத்தில் வந்த நகைச்சுவை அனுபவம் இது. படித்து விட்டு ரொம்ப ரசிச்சேன். நீங்களும் ரசிக்க பகிர்கிறேன்.


சாத்துக்குடி வாங்கும்முன் யோசியுங்கள் :

கல்யாணம் பண்ணிக்கொள்ளுமுன்  யோசியுங்கள்,

வீடு வாங்குமுன் யோசியுங்கள்,

வேலையில் சேருமுன் யோசியுங்கள்,

கோபப்படுமுன் யோசியுங்கள்,

சிட் பண்டில் ஜாயின்ட் கையெழுத்துப் போடுமுன் யோசியுங்கள்,

கடன் கொடுக்கும் முன் யோசியுங்கள்,

மருத்துவ ஸ்பெஷலிஸ்ட் - இடம் போகுமுன் யோசியுங்கள்,

காரை சாலையில் பார்க் செய்யுமுன் யோசியுங்கள்,

மனைவி கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் என்றால் யோசியுங்கள்,

ஸ்வெட்டரை ட்ரை வாஷ் போடுமுன் யோசியுங்கள்,

- என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாத்துக்குடி வாங்கறதுக்கு முன்னே கூடவா யோசிக்க வேண்டும் ?

ஆமாம், ஆமாம்... சாத்துக்குடி வாங்கும் முன் ரொம்ப விஷயங்கள் யோசிக்க வேண்டும்.

கல்லெல்லாம் மாணிக்கக்  கல்லாகுமா ? வெளுத்ததெல்லாம் பாலாகுமா ? பச்சையாக உருண்டையாக இருப்பதெல்லாம் சாத்துக்குடி  ஆகுமா ?

தடபுடலாக ஒரு பாடகர் டிரஸ் செய்து கொண்டு, நெற்றியில் ஏராளமான மதமுத்திரைகள், தோளில் துப்பட்டாக்கள், கழத்தில் செயின் வாயில் சிவக்க சிவக்க வெற்றிலை பாக்கு,உடம்பு பூரா பரவிய செண்டு மனம். இதைப் பார்த்ததும் அவர் பிரமாதமாகப் பாடுவார் என்று யாராவது நினைத்தால் அது சரியாக இருக்காது. அவர் வாயைத் திறந்ததும்தான் இனிமையான சங்கீதத்துக்கும் அவருக்கும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பதை நம்மால் கணிக்க முடியும்.

போலிகள் மனிதரில் மட்டுமல்ல, பழங்களிலும், முக்கியமாக சாத்துக்குடியில் நிறையவே உண்டு.

பெரிய உருண்டைப் பழத்துக்கு விலை அதிகமாயிருக்கும். நிச்சயதார்த்த சமயம் சபை நிறைக்கனும்னு ஒரு டஜனைத் தட்டில் பரப்பி வைக்க வேண்டுமானால் அவை பயன்படலாம்

ஒண்ணாம் நம்பர் காண்டா மிருகத் தோல்! பப்ளிமாசின் கசின் ப்ரதர் ரகமாயிருக்கும்.

தோல் மட்டும் ஒரு அங்குல தடிமனாக இருக்கும்

அதற்கென்று தோல் மெல்லிசா இருந்தால் ருசியாயிருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தோல் மெல்லிசாக இருக்கிற பழங்கள் புளிக்கும் பாருங்கள் ஒரு புளிப்பு. உரித்த பழத்தை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்ற உதார குணம் எந்தக் கஞ்ச மகா பிரபுவுக்கும் தோன்றக் கூடிய பயங்கரப்  புளிப்பு

சில தற்கால சாத்துக்குடிகள், ஆரஞ்சுப் பழ வண்ணத்தில் நடமாடுகின்றன. யாரோ கலப்புக் கல்யாணம் நடத்தியிருக்கிறார்கள்

தோலைப்  பார்த்து மயங்கி, கேட்கிற விலையைக் கொடுத்து வாங்கி, உரித்தால் புதிய மொந்தையில்  பழைய கள்  சமாசாரம்தான்.

இன்னொரு கசப்பான அனுபவத்தையும், நுகர்வோரின்  எச்சரிக்கைகாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

சாத்துக்குடி  என்றால் ஒன்று இனிக்க வேண்டும் அல்லது புளிக்க வேண்டும். சில பழம் கசந்து தொலைக்கும்

எலுமிச்சம் பழமா, சாத்துக்குடியா என்று இனம் கண்டு புடிக்க முடியாத அளவு சிறுசிறு சாத்துக்குடிகளைக் கொண்டு வந்து தலையில் கட்டும் கூடைகாரிகள் உண்டு.

ஜாலக்காக, ' ஜூஸ் பழம் சார்! இப்ப எங்கே கிடைக்குது' என்று இரண்டு டஜன் நம் தலையில் கட்டி விட்டுப் போய் விடுவாள்.

அவள் போன பிறகு நமக்கு நேரம் கிடைத்து மேற்படி பழங்களை அறுத்துப் பிழிந்தால் ஜூஸாவது ஒன்றாவது. ஜூஸ் நம்ம கண்ணிலிருந்து வந்தால் தான் உண்டு.

பழ ஸ்டாலில் வாங்கினால் ரொம்பப் பேரம் செய்ய முடியாது. பழக்கடைக்காரர்களில் பல பேருக்கு அரசியல் பின்னணி வேறு உண்டு.  அவர்களிடம் பேரம் பண்ணினால் தோலை  உரித்து விடுவார்கள் ( நம்ம தோலை )!

அவன் சொன்னதே விலை, கொடுத்ததே பழம். அடுக்கின வரிசையிலிருந்து நாம் காட்டும் பழத்தை செத்தாலும் எடுத்துத் தரமாட்டான்

மேற்படி பழங்கள் விலை அதிகமானாலும், கடையனின் ஜபுர் அதிகமாயிருந்தாலும் பழங்களில் கேவலமான புளிப்பு இருக்காது. பெயர் கேட்டு விடுமே என்று கொஞ்சம் நல்ல வெரைட்டி வைத்திருப்பான். சாத்துக்குடியில் ருசிக்கு முன்னதாக இன்னொரு இம்சையும் உண்டு.

கமலா ஆரஞ்சு போல உரித்தோமா, வாயில் போட்டுக் கொண்டோமா என்பது சாத்துக்குடியில் கிடையாது. உறித்தபின் ஒரு ஷேவிங் செய்ய வேண்டும்.

அந்த வெள்ளைப் படலத்தையும் நாரையும் ஜாக்கிரதையாக நீக்க வேண்டும். சில வயதாளிகள் அதை ஒரு வகை இனிய ஹாபியாக நினைக்கிறார்கள். இளையவர்களுக்கு அவ்வளவு பொறுமை இருக்காது. சரியாக உரிக்காமல் அப்படியே வாயில் அடைத்து கச்சக் பச்சக் என்று நாசூக்கு இல்லாமல் விழுங்கி வைப்பார்கள்.

ஒழுங்காக உள்தோல் பிரித்தபின் சுளைபிரி கட்டம், சுளைகள் எப்போதாவது தான் சமத்தாகப் பிரிந்து வரும். பெரும்பாலான சமயங்களில் கன்னாபின்னாவென்று பிரியும்.

சுளை எடுத்த பின் கொட்டை நீக்கு படலம். கொட்டைக்குச் சீரான கணக்கா ஒரு இழவா ? ஒரு சுளையில் நாலு இருக்கும்.  இன்னொன்றில் ஒன்றே ஒன்று இருக்கும். சிலதில் இல்லாததுபோல் மேலுக்கு ஏமாற்றி வாயில் போட்ட பிறகு பல் டிபார்ட்மெண்டால் கண்டு புடிக்கப்படும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சாத்துக்குடி பற்றி என்னால் சொல்ல முடியும்.

சாத்துக்குடி என்பது ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய பழம். ஆப்பிளை விட மலிவு. வாழைப் பழத்தை விட உயர்வு. ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் நடுத்தர வர்கத்தினர் சாத்துக்குடியை நாட அதுவே காரணம். நோயாளிகளுக்குப் பொழுதுபோக்க ஒரு சாதனம். கிள்ளிக் கில்லி நாள் பூரா உரித்துக் கொண்டிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சாத்துக்குடியை யாராவது உரித்துத் தந்தால் சாப்பிடலாம் அதுவும் இனிப்பாக இருக்கிறது என்று உறுதிமொழி அவர்கள் அளித்தால்.

இல்லையேல் அந்த ஆஸ்பத்திரிப் பழத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலிருப்பதே சிறப்பு.



Related Posts Plugin for WordPress, Blogger...