Author: Priya ram
•Friday, January 28, 2011
வரன் தேடித் தரும்
பார்வதியம்மாவுக்கு
பத்தும் இருபதும் அழுததையும்....

பவுன் விலை
ஏறும்போதெல்லாம்
அப்பாவின் வருமானத்தை
ஆதங்கத்தோடு பழித்ததையும்....

தோழிக்குத் திருமணம் என்று
தகவல் சொன்னாலே
'நகராத மூதேவி' என
பட்டம் தந்து அரற்றியதையும்....

எல்லையம்மன் கோவில்
எலுமிச்சை விளக்குக்கென
மாத பட்ஜெட் ஒதுக்கியதையும்
மறந்துவிட்டு....

அழத்தான் செய்தாள் அம்மா...
வயது முதிர்ந்த அக்கா
வாழ்க்கைப்பட்டுப் போகையில்!
Author: Priya ram
•Thursday, January 27, 2011
"தாயே... காமாட்சி...
இதுவாவது
ஆண் குழந்தையா
இருக்கணும்..... "
- கும்பிட மட்டும்
பெண் தெய்வம் தேவை....
குழந்தையாய்
தேவை இல்லை ?


நான் கருவில் இருந்து
விடுதலையாக
எந்த முறையில்
போராடுவது ?
சொல்லுங்கள்
காந்தி மகாத்மாவே......


நெல் மணி
கள்ளிப் பால்
ஈரத் துணி
இவற்றை விடக்
கொடியது....
"சீ! பெண் குழந்தையா ?"
- என்கிற ஏளன விசாரிப்பு !


இந்த உலகம்
பெண்ணை பயமுறுத்தும்....
அல்லது
பெண்ணைப் பார்த்து
பயப்படும்...
இயல்பாய் எப்போது
இருக்கும்.... ?


பெண்கள்
புத்தகங்களைத்
திறந்தால்தான்
பெண் சிசுக் கொலையை
மூட முடியும்!

கன்னிகைகளாக
பெண்களை
தேடுகிறார்கள்.....
குழந்தைகளாக
அவர்களை
கொன்றுவிட்டு!

இவர்கள்
பெற்றெடுக்க
மாட்டார்கள்!
பெண்ணே.....
பிறந்திடு !

Author: Priya ram
•Wednesday, January 26, 2011
விளக்கொளியில் அடங்கிவிடும்
சிறிய அறை கொண்ட
ஓட்டு வீடு

புள்ளிக்கோலம் போட
அகலமான வாசல்
மாடுகளைக் கட்டிவைக்க
வீட்டருகே பட்டி
காட்டு மரங்கள் செடி கொடிகள்
நிறைந்த சூழல்

மாலை நேரத்தில்
பெயர் தெரியாத பூச்சிகளின்
ரீங்கார இசை

இரவு உணவு வாசலில்
கயிற்றுக் கட்டிலில்

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டும்
உன்னோடு கொஞ்சம்
கதை பேசிக்கொண்டுமாக
நாட்கள் இனிமையாக
நகர்ந்திருக்கும்

கூடை முடைந்து கொண்டோ
பானை செய்து கொண்டோ
விவசாயம் பார்த்துக் கொண்டோ
உனக்கு அனுசரணையாய்
நானும்...
எனக்கு ஆதரவாய்
நீயும் இருந்திருந்தால்
நாட்கள் இனிமையாகவே
நகர்ந்திருக்கும்

ஆனால்.....

இந்த நகரத்து நரகத்தில்
கணிப்பொறியாளனாய்
நீயிருக்க.....
கனற்பொறியைக் கக்கிக்கொண்டு
நகர்கின்றன நாட்கள்.


 
Author: Priya ram
•Tuesday, January 25, 2011
1. சௌ சௌ காயை நறுக்கும்போது கை பிசுபிசுப்பாகிவிடும். இதைத் தவிர்க்க காயை நீள வாக்கில் இரண்டாக வெட்டி, ஒன்றோடு ஒன்றைத் தேய்த்தால் நுரை வரும். பிறகு தண்ணீரில் அலம்பிவிட்டு நறுக்கினால் பிசுபிசுப்பே படியாது.
2. இரண்டு மணி நேரத்தில் தயிர் செய்ய பாலை காய்ச்சி மிதமான சூட்டில் இரண்டு ஸ்பூன் தயிர் விட்டு கலக்கி அதை ஹாட் பேக்கில் வைத்து மூடி விட்டால் இரண்டே மணி நேரத்தில் கெட்டியான தயிர் கிடைக்கும்.
3.வெண்ணை காய்ச்சி இறக்கும்போது கடைசில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு விட்டால் நெய் நல்ல மணமாகவும் இருக்கும் கசக்கவும் செய்யாது. எங்க வீட்டுல எங்க மாமியார் வெத்தலை போடுவாங்க. அத சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.
Author: Priya ram
•Monday, January 24, 2011
இது என்னோட முதல் குறிப்பு. முதல் குறிப்பாக நான் படிச்சு ரசிச்ச   இந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய் வீடு !

வருடம் ஒருமுறை
புதையலெனக் கிடைக்கிறது
என் பிள்ளைகளுக்கு ........

அரவணைத்து
கதைகள் கூறி மகிழும்
தாத்தா, பாட்டி .....

பெருமையுடன்
ஊர் சுற்றிக் காட்டும்
மாமன்மார்கள் .....

செல்லமாகக் கடிந்து
உணவூட்டும்
சித்திமார்கள் ......

எனக்கும் கிடைத்து விடுகிறது
பழக்கமான கூடத்து ஓரத்தில்
அம்மாவின் சுண்டு விரல் பிடித்து
நிம்மதியாகக் கண்ணயர
ஆறுதலான ஒரு மடி !

Related Posts Plugin for WordPress, Blogger...