Author: Priya ram
•Friday, October 26, 2012
நவராத்திரி முடிஞ்சு போச்சு... எங்க வீட்டு நவராத்திரி போடோஸ்.... உங்களுக்காக...
எங்க வீட்டுல 5 படிக்கட்டு பொம்மை வைத்தோம்....
முதல் ரெண்டு படிக்கட்டு... மரப்பாச்சி பொம்மை கொலுவில் வைக்கணும்...
ரெண்டாவது, மூன்றாவது படிக்கட்டு... இதில் தசாவதாரம் இருக்கு...
நான்காவது, ஐந்தாவது படிக்கட்டு...
நான்காவது படிக்கட்டில் இருக்கும் இந்த பொம்மைகள் கொண்டப்பள்ளி பொம்மைகள்... மர பொம்மைகள்...
கல்யாண செட்....
செட்டியார்.... பழம் மற்றும் காய் கடை...
செட்டியார் இரும்பு பாத்திரக்கடை... இதில் குட்டி குட்டி அடுப்பு, தவா, அரிவாள்மனை, வாணலி, முறம் எல்லாம் இருக்கு.
மாக்கல் பொம்மை... இதில் அம்மி, குழவி, உரல், இட்லி தட்டு, விளக்கு எல்லாம் இருக்கு...
கொலு, ரொம்ப வருஷமா எங்க வீடுகளில் வைக்கறது... ஒவ்வொரு வருஷமும் புது பொம்மை எதாவது வாங்குவோம்... கல்யாணம் ஆகி வரும்போது, அம்மா வீட்டில் இருந்து கொஞ்சம் பொம்மை தருவாங்க... இப்படி நிறைய பொம்மை சேர்ந்து விடும்.. இந்த மாக்கல் பொம்மை, இரும்பு பொம்மை,மற்றும் சில பொம்மை எல்லாம் எங்க அம்மா வீட்டில் எனக்கு தந்தது... இது எல்லாம் எங்க பாட்டி காலத்து பொம்மை...
என் கணவருக்கு பார்க் வைப்பது ரொம்ப புடிக்கும்.. இந்த தடவை வைக்க முடியலை... அடுத்த தடவை கண்டிப்பாக வைப்போம்... கொலுவை பார்த்து விட்டு ஒரு பாட்டு பாடிட்டு போங்க.... கேட்கறதுக்கு நான் ரெடி.... பாடறதுக்கு நீங்க ரெடியா ????... :)
Author: Priya ram
•Wednesday, October 17, 2012
அம்மா செய்து தந்த சில உணவு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது... ஸ்வீட் பணியாரம் செய்வது பற்றிய குறிப்பை சீக்கிரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதாக சொல்லி இருந்தேன்.... இந்த பணியாரம் போன வார இறுதியில் தான் செய்தேன்.... இதற்கான செய்முறை ரொம்ப ஈஸி தான்...நீங்களும் முயற்சித்து பாருங்கள்...
தேவையானவை :
கோதுமைமாவு - 1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
ஏலக்காய்
செய்முறை :
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து கல் இல்லாமல் வடிகட்டவும்.
கோதுமைமாவு, மைதா மாவு, அரிசி மாவு ஏலக்காய் எல்லாம் போட்டு வெல்ல தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்...
கரைத்த மாவை குழிபணியாரம் கல்லில் விட்டு, எண்ணெய் கொஞ்சம் அதிகம் விட்டு வேக வைத்து....
திருப்பி போட்டு (இதை திருப்புவதற்காக ஒரு கம்பி தந்து இருக்காங்க.... ஆனால் நான் ஸ்பூன் வைத்தே திருப்பி விடுவேன்.... அது தான் எனக்கு ஈஸியாக இருக்கு ) இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்...
ஸ்வீட் பணியாரம் ரெடி.
எனக்கு தமிழ் குடும்பம் மூலமாக 2009 இல் ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க.... அவங்க கூட இதுவரை பார்க்காமல் பேசிகிட்டே நல்ல தோழிகளான நாங்க.... நேத்து சென்னையில் சந்தித்து கொண்டோம்... உங்க எல்லோருக்கும் அதற்காக தான் இந்த ஸ்வீட் ... எடுத்துக்கோங்க.. இந்த இனிப்பு மாதிரியே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.... ஒரு தோழியை சந்தித்ததில்.... :)
அந்த தோழி வேற யாரும் இல்லைங்கோ... நம்ம
மகி.... தானுங்கோ...
Author: Priya ram
•Thursday, October 04, 2012
இந்த கோவில் பெங்களூர்ல நாங்க பார்த்து இருக்கோம். ரொம்ப அருமையா இருக்கும்... அதே கோவில்... இங்க சென்னைல ரொம்ப அழகா இருக்குனு.. தெரிஞ்சவங்க சொன்னதை வைத்து, நானும் என் கணவரும் ஒரு வார இறுதியில் போய் பார்த்தோம். ரொம்ப அழகா கட்டி இருக்காங்க... அங்க போட்டோ எடுக்க எந்த தடையும் இல்லைன்னு சொன்னதும், போட்டோ எடுத்து தள்ளிட்டோம்... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு...
இந்த கோவில் சோழிங்கநல்லூர் கிட்ட இருக்கு.... இது தான் கோவிலின் வெளி வீவ்...
இது உள் அமைப்பு...
கோவில் நேரம்
கோவில் உள்ளே நுழையும் போதே இந்த பசு, கன்று சிலை தான் வரவேற்கிறது.....
கோவில் சுற்றி, சுவற்றில் வரையப் பட்டு இருக்கும் கிருஷ்ண லீலைகள்.
வசுதேவருக்கும்,தேவகிக்கும் - கிருஷ்ணர் மதுராவில் பிறந்தது...
கிருஷ்ணரை மதுராவிலிருந்து கோகுலம் எடுத்து செல்கிறார் வசுதேவர்...
பூதகி எனும் அரக்கியை, கண்ணன் அழித்தது....
நண்பர்களுடன் வெண்ணெய் திருடியது...
யசோதா கண்ணனை உரலில் கட்டியது...
யசோதாவிற்கு உலகத்தை வாயில் காட்டியது....
காளிங்க நர்த்தனம்....
கோபியர்கள் துணியை எடுத்துக்கொண்டு, கண்ணன் தர மறுத்தது....
கண்ணனை யசோதா கட்டிப்போட்டது...
கோவர்தணகிரி மலையை தனது சுண்டுவிரலால் தூக்கியது...
கோவில் சுவாமிகள் வீவ்...
ராதை, கிருஷ்ணர்,ராதையின் தோழிகள்....
ஸ்ரீ நிதை, ஸ்ரீ குரு...
அந்த கோவிலை சுற்றும் போது ஆனந்தமாக இருந்தது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. நேரம் கிடைத்தால் போய் பாருங்கள்.....
கோவில் இருக்கும் இடத்தை சரியாக தெரிந்து கொள்ள
இங்கே பாருங்கள்.....
கண்ணனின் லீலைகள் பார்க்க பார்க்க, கேட்க கேட்க ஆனந்தம் தான்....
Author: Priya ram
•Tuesday, September 04, 2012
பாக்கியம் ராமசாமி அவர்களின் "சில நேரங்களில் சில அனுபவங்கள்" என்ற புத்தகத்தில் வந்த நகைச்சுவை அனுபவம் இது. படித்து விட்டு ரொம்ப ரசிச்சேன். நீங்களும் ரசிக்க பகிர்கிறேன்.
சாத்துக்குடி வாங்கும்முன் யோசியுங்கள் :
கல்யாணம் பண்ணிக்கொள்ளுமுன் யோசியுங்கள்,
வீடு வாங்குமுன் யோசியுங்கள்,
வேலையில் சேருமுன் யோசியுங்கள்,
கோபப்படுமுன் யோசியுங்கள்,
சிட் பண்டில் ஜாயின்ட் கையெழுத்துப் போடுமுன் யோசியுங்கள்,
கடன் கொடுக்கும் முன் யோசியுங்கள்,
மருத்துவ ஸ்பெஷலிஸ்ட் - இடம் போகுமுன் யோசியுங்கள்,
காரை சாலையில் பார்க் செய்யுமுன் யோசியுங்கள்,
மனைவி கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் என்றால் யோசியுங்கள்,
ஸ்வெட்டரை ட்ரை வாஷ் போடுமுன் யோசியுங்கள்,
- என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாத்துக்குடி வாங்கறதுக்கு முன்னே கூடவா யோசிக்க வேண்டும் ?
ஆமாம், ஆமாம்... சாத்துக்குடி வாங்கும் முன் ரொம்ப விஷயங்கள் யோசிக்க வேண்டும்.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ? வெளுத்ததெல்லாம் பாலாகுமா ? பச்சையாக உருண்டையாக இருப்பதெல்லாம் சாத்துக்குடி ஆகுமா ?
தடபுடலாக ஒரு பாடகர் டிரஸ் செய்து கொண்டு, நெற்றியில் ஏராளமான மதமுத்திரைகள், தோளில் துப்பட்டாக்கள், கழத்தில் செயின் வாயில் சிவக்க சிவக்க வெற்றிலை பாக்கு,உடம்பு பூரா பரவிய செண்டு மனம். இதைப் பார்த்ததும் அவர் பிரமாதமாகப் பாடுவார் என்று யாராவது நினைத்தால் அது சரியாக இருக்காது. அவர் வாயைத் திறந்ததும்தான் இனிமையான சங்கீதத்துக்கும் அவருக்கும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பதை நம்மால் கணிக்க முடியும்.
போலிகள் மனிதரில் மட்டுமல்ல, பழங்களிலும், முக்கியமாக சாத்துக்குடியில் நிறையவே உண்டு.
பெரிய உருண்டைப் பழத்துக்கு விலை அதிகமாயிருக்கும். நிச்சயதார்த்த சமயம் சபை நிறைக்கனும்னு ஒரு டஜனைத் தட்டில் பரப்பி வைக்க வேண்டுமானால் அவை பயன்படலாம்
ஒண்ணாம் நம்பர் காண்டா மிருகத் தோல்! பப்ளிமாசின் கசின் ப்ரதர் ரகமாயிருக்கும்.
தோல் மட்டும் ஒரு அங்குல தடிமனாக இருக்கும்
அதற்கென்று தோல் மெல்லிசா இருந்தால் ருசியாயிருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தோல் மெல்லிசாக இருக்கிற பழங்கள் புளிக்கும் பாருங்கள் ஒரு புளிப்பு. உரித்த பழத்தை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்ற உதார குணம் எந்தக் கஞ்ச மகா பிரபுவுக்கும் தோன்றக் கூடிய பயங்கரப் புளிப்பு
சில தற்கால சாத்துக்குடிகள், ஆரஞ்சுப் பழ வண்ணத்தில் நடமாடுகின்றன. யாரோ கலப்புக் கல்யாணம் நடத்தியிருக்கிறார்கள்
தோலைப் பார்த்து மயங்கி, கேட்கிற விலையைக் கொடுத்து வாங்கி, உரித்தால் புதிய மொந்தையில் பழைய கள் சமாசாரம்தான்.
இன்னொரு கசப்பான அனுபவத்தையும், நுகர்வோரின் எச்சரிக்கைகாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
சாத்துக்குடி என்றால் ஒன்று இனிக்க வேண்டும் அல்லது புளிக்க வேண்டும். சில பழம் கசந்து தொலைக்கும்
எலுமிச்சம் பழமா, சாத்துக்குடியா என்று இனம் கண்டு புடிக்க முடியாத அளவு சிறுசிறு சாத்துக்குடிகளைக் கொண்டு வந்து தலையில் கட்டும் கூடைகாரிகள் உண்டு.
ஜாலக்காக, ' ஜூஸ் பழம் சார்! இப்ப எங்கே கிடைக்குது' என்று இரண்டு டஜன் நம் தலையில் கட்டி விட்டுப் போய் விடுவாள்.
அவள் போன பிறகு நமக்கு நேரம் கிடைத்து மேற்படி பழங்களை அறுத்துப் பிழிந்தால் ஜூஸாவது ஒன்றாவது. ஜூஸ் நம்ம கண்ணிலிருந்து வந்தால் தான் உண்டு.
பழ ஸ்டாலில் வாங்கினால் ரொம்பப் பேரம் செய்ய முடியாது. பழக்கடைக்காரர்களில் பல பேருக்கு அரசியல் பின்னணி வேறு உண்டு. அவர்களிடம் பேரம் பண்ணினால் தோலை உரித்து விடுவார்கள் ( நம்ம தோலை )!
அவன் சொன்னதே விலை, கொடுத்ததே பழம். அடுக்கின வரிசையிலிருந்து நாம் காட்டும் பழத்தை செத்தாலும் எடுத்துத் தரமாட்டான்
மேற்படி பழங்கள் விலை அதிகமானாலும், கடையனின் ஜபுர் அதிகமாயிருந்தாலும் பழங்களில் கேவலமான புளிப்பு இருக்காது. பெயர் கேட்டு விடுமே என்று கொஞ்சம் நல்ல வெரைட்டி வைத்திருப்பான். சாத்துக்குடியில் ருசிக்கு முன்னதாக இன்னொரு இம்சையும் உண்டு.
கமலா ஆரஞ்சு போல உரித்தோமா, வாயில் போட்டுக் கொண்டோமா என்பது சாத்துக்குடியில் கிடையாது. உறித்தபின் ஒரு ஷேவிங் செய்ய வேண்டும்.
அந்த வெள்ளைப் படலத்தையும் நாரையும் ஜாக்கிரதையாக நீக்க வேண்டும். சில வயதாளிகள் அதை ஒரு வகை இனிய ஹாபியாக நினைக்கிறார்கள். இளையவர்களுக்கு அவ்வளவு பொறுமை இருக்காது. சரியாக உரிக்காமல் அப்படியே வாயில் அடைத்து கச்சக் பச்சக் என்று நாசூக்கு இல்லாமல் விழுங்கி வைப்பார்கள்.
ஒழுங்காக உள்தோல் பிரித்தபின் சுளைபிரி கட்டம், சுளைகள் எப்போதாவது தான் சமத்தாகப் பிரிந்து வரும். பெரும்பாலான சமயங்களில் கன்னாபின்னாவென்று பிரியும்.
சுளை எடுத்த பின் கொட்டை நீக்கு படலம். கொட்டைக்குச் சீரான கணக்கா ஒரு இழவா ? ஒரு சுளையில் நாலு இருக்கும். இன்னொன்றில் ஒன்றே ஒன்று இருக்கும். சிலதில் இல்லாததுபோல் மேலுக்கு ஏமாற்றி வாயில் போட்ட பிறகு பல் டிபார்ட்மெண்டால் கண்டு புடிக்கப்படும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சாத்துக்குடி பற்றி என்னால் சொல்ல முடியும்.
சாத்துக்குடி என்பது ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய பழம். ஆப்பிளை விட மலிவு. வாழைப் பழத்தை விட உயர்வு. ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் நடுத்தர வர்கத்தினர் சாத்துக்குடியை நாட அதுவே காரணம். நோயாளிகளுக்குப் பொழுதுபோக்க ஒரு சாதனம். கிள்ளிக் கில்லி நாள் பூரா உரித்துக் கொண்டிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சாத்துக்குடியை யாராவது உரித்துத் தந்தால் சாப்பிடலாம் அதுவும் இனிப்பாக இருக்கிறது என்று உறுதிமொழி அவர்கள் அளித்தால்.
இல்லையேல் அந்த ஆஸ்பத்திரிப் பழத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலிருப்பதே சிறப்பு.
Author: Priya ram
•Wednesday, August 08, 2012
இவை எல்லாம் நான் செய்த மணி மாலைகள்
பார்த்து விட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க.....