Author: Priya ram
•Tuesday, February 01, 2011
சுற்றி விளையாட தூண்கள்
ஒளி காட்ட விளக்கு மாடங்கள்
கதை பேசித் தூங்க ரெட்டைத் திண்ணை
மழையை ரசிக்க மல்லிகை படர்ந்த முற்றம்
பத்தியும் பக்தியும் மணக்கும் பூஜையறை
பித்தளைப் பாத்திரக் காற்று மணக்கும் காமிரா அறை
உறவின் பெருமை சாற்றும் பிரேம் போட்டோ படங்கள்
அந்துருண்டை மணம் வீசும் நிறம்போன ட்ரங்கு பொட்டி
தவறாய் மணி காட்டி தாளம் போடும் கூண்டுக் கடிகாரம்
தலைமுறை பல கண்ட மாதுளசி கொல்லை
வாழ்ந்துகொள்ள வாய்ப்பொன்று கிடைத்தால்
பத்திரப்படுத்துங்கள் அப்படியே
பாட்டியின் வீட்டை....
Author: Priya ram
•Friday, January 28, 2011
வரன் தேடித் தரும்
பார்வதியம்மாவுக்கு
பத்தும் இருபதும் அழுததையும்....
பவுன் விலை
ஏறும்போதெல்லாம்
அப்பாவின் வருமானத்தை
ஆதங்கத்தோடு பழித்ததையும்....
தோழிக்குத் திருமணம் என்று
தகவல் சொன்னாலே
'நகராத மூதேவி' என
பட்டம் தந்து அரற்றியதையும்....
எல்லையம்மன் கோவில்
எலுமிச்சை விளக்குக்கென
மாத பட்ஜெட் ஒதுக்கியதையும்
மறந்துவிட்டு....
அழத்தான் செய்தாள் அம்மா...
வயது முதிர்ந்த அக்கா
வாழ்க்கைப்பட்டுப் போகையில்!
Author: Priya ram
•Thursday, January 27, 2011
"தாயே... காமாட்சி...
இதுவாவது
ஆண் குழந்தையா
இருக்கணும்..... "
- கும்பிட மட்டும்
பெண் தெய்வம் தேவை....
குழந்தையாய்
தேவை இல்லை ?
நான் கருவில் இருந்து
விடுதலையாக
எந்த முறையில்
போராடுவது ?
சொல்லுங்கள்
காந்தி மகாத்மாவே......
நெல் மணி
கள்ளிப் பால்
ஈரத் துணி
இவற்றை விடக்
கொடியது....
"சீ! பெண் குழந்தையா ?"
- என்கிற ஏளன விசாரிப்பு !
இந்த உலகம்
பெண்ணை பயமுறுத்தும்....
அல்லது
பெண்ணைப் பார்த்து
பயப்படும்...
இயல்பாய் எப்போது
இருக்கும்.... ?
பெண்கள்
புத்தகங்களைத்
திறந்தால்தான்
பெண் சிசுக் கொலையை
மூட முடியும்!
கன்னிகைகளாக
பெண்களை
தேடுகிறார்கள்.....
குழந்தைகளாக
அவர்களை
கொன்றுவிட்டு!
இவர்கள்
பெற்றெடுக்க
மாட்டார்கள்!
பெண்ணே.....
பிறந்திடு !
Author: Priya ram
•Wednesday, January 26, 2011
விளக்கொளியில் அடங்கிவிடும்
சிறிய அறை கொண்ட
ஓட்டு வீடு
புள்ளிக்கோலம் போட
அகலமான வாசல்
மாடுகளைக் கட்டிவைக்க
வீட்டருகே பட்டி
காட்டு மரங்கள் செடி கொடிகள்
நிறைந்த சூழல்
மாலை நேரத்தில்
பெயர் தெரியாத பூச்சிகளின்
ரீங்கார இசை
இரவு உணவு வாசலில்
கயிற்றுக் கட்டிலில்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டும்
உன்னோடு கொஞ்சம்
கதை பேசிக்கொண்டுமாக
நாட்கள் இனிமையாக
நகர்ந்திருக்கும்
கூடை முடைந்து கொண்டோ
பானை செய்து கொண்டோ
விவசாயம் பார்த்துக் கொண்டோ
உனக்கு அனுசரணையாய்
நானும்...
எனக்கு ஆதரவாய்
நீயும் இருந்திருந்தால்
நாட்கள் இனிமையாகவே
நகர்ந்திருக்கும்
ஆனால்.....
இந்த நகரத்து நரகத்தில்
கணிப்பொறியாளனாய்
நீயிருக்க.....
கனற்பொறியைக் கக்கிக்கொண்டு
நகர்கின்றன நாட்கள்.